”எல்லாவற்றையும் செய்துவிட்டு திசைதிருப்புகிறது ABVP அமைப்பு”-காயமடைந்த தமிழக மாணவர் பேட்டி

”டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு ஏ.பி.வி.பி. அமைப்பினரே காரணம்” என தாக்குதலுக்குள்ளான மாணவர் நாசர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்ரவரி 19), `ஐஐடி வளாகங்களில் பட்டியலின, இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் உள்ள சாதி, மத ஒடுக்குமுறை’ என்பது குறித்த ஆவணப்படமொன்று, அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது. அதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் என தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜே.என்.யூ-வில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
image
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏ.பி.வி.பி. அமைப்பினர் அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலின்போது அவர்கள் அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங்களை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் நாசருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் முயன்ற நிலையில், அவர்களை மறித்து ஏ.பி.வி.பியினர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரத்தில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஏபிவிபி அமைப்பு, “சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்தை இடதுசாரி மாணவர்கள் அரங்கில் இருந்து வெளியே தூக்கி எரிந்ததால்தான், பிரச்சனை எழுந்தது. அப்போது இடதுசாரி மாணவர்கள்தான் முதலில் தாக்குதல் நடத்தினர்” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
image
இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்குள்ளான நாசரிடம் பேசினோம். அவர், “ஏபிவிபி அமைப்பினர் சொல்வது முற்றிலும் தவறு. அவர்கள் தவறு செய்ததால்தான் நாங்கள் புகார் அளித்துள்ளோம். அந்த அமைப்பினர் இங்கிருக்கும் மற்ற மாணவர் அமைப்புகளை அழிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதையடுத்தே எல்லாவற்றுக்கும் பிரச்சனை செய்கின்றனர். இதுகுறித்து கேட்டால், பிரதமர் மோடிக்கு எதிராக இருப்பதாகப் பதில் சொல்கின்றனர். நேற்று எந்தப் பிரச்சினையும் நடைபெறவில்லை.
இந்தி திரைப்படம் திரையிடலின்போது உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் அவர்கள்தான். பெரியார், அம்பேத்கர் படங்களையும் அவர்கள்தான் அடித்து நொறுக்கினார்கள். இப்படி எல்லாச் செயல்களையும் அவர்களே செய்துவிட்டு, எங்கள் மீது திசை திருப்பிவிட்டனர். நாங்கள் எதையுமே செய்யவில்லை. அவர்கள், எங்களைத் தாக்கியபோது எங்கள் தரப்பினர் அதைத் தடுக்கத்தான் செய்தனர். தாக்கப்பட்ட மாணவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட நிலையில்கூட, அவர்கள் ஆம்புலன்ஸுக்குள் நுழைந்து தாக்கினர்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.