
கேளம்பாக்கம் சிவன் கோயிலில் நான் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் மயில்சாமி திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுள்ளார். கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, திரும்பிய பிறகு அவருக்கு உயிர் பிரிந்தது.
மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். சிவனின் அதி தீவிர பக்தர். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது எம்ஜிஆர், சிவன் பற்றி மட்டுமே பேசுவார் மயில்சாமி.
தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவபெருமான் அழைத்துச் சென்றுவிட்டார். மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு.
கேளம்பாக்கம் சிவன் கோயிலில் நான் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் எனும் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன். விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பு என்று கூறினார்.
newstm.in