முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தாசில்தார் உயிரிழப்பு; முதல்வர் இரங்கல்.!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகள் பொது பிரிவில் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு தடகளம், சிலம்பம், இறகுப்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

பள்ளி பிரிவில் 12 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி பிரிவில் 17 முதல் 25 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கும் தடகளம், சிலம்பம், கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி, மேஜைப்பந்து, கைப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, சிறப்பு கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

அரசு பணியாளர்கள் பிரிவில் தடகளம், செஸ், இறகுப்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவு ஆகியவற்றிற்கு கிரிக்கெட் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பு வீரர்-வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. போட்டி நடைபெறும் அன்று நேரடியாக பங்கேற்க அனுமதியில்லை. இந்த போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை பள்ளி மாவட்ட பிரிவிற்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சித்தலைவர் சாந்தி, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி வைத்தார்.

அந்தவகையில் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இன்று மதியம் நடைபெற்ற முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகள் முகாம் தாசில்தாராக பணியாற்றி வந்த அதியமான் கலந்துகொண்டு போட்டியில் விளையாடினார்.

அவர் விளையாடிக்கொண்டிருந்த போது, அவருக்க திடிரென நெஞ்சுவலி வந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாசில்தார் அதியமான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கமலின் ஆதரவு முக்கியமானது மாணிக்கம் தாகூர் பேட்டி

முதல்கோப்பைக்காக விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட தாசில்தார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் அரசு அலுவலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தாசில்தார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது, வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. வட்டாட்சியர் அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.