அதிக பணத்திற்கு ஆசைப்பட்ட மக்கள் – ஆன்லைன் மூலம் கோடிகளை சுருட்டிய கும்பல்!

நிலக்கோட்டை பகுதியில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை தனிபடை போலீசார் கைது செய்தனர்
நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 ஆயிரம் பணம் கட்டினால் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் 150 நாளில் கமிஷன் போக ரூ.6 ஆயிரமும், ரூ.5 லட்சம் கட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் வீதம் 150 நாளில் ரூ.11 லட்சம் திருப்பித் தருவதாக ஆன்லைனில் ஒரு கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது.
இதை நம்பி, நடுத்தர மற்றும் விவசாய மக்கள், அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இந்த மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளனர். சிறிய தொகைக்கு உடனடியாக பணத்தை திருப்பிக் கொடுத்த அந்த மோசடி கும்பல் நம்பிய பொதுமக்கள் பலரும் லட்சக்கணக்கில் பணத்தை அந்த கும்பலிடம் கொடுக்கத் தொடங்கினர். அலுவலகம் இன்றி ஆன்லைன் மூலமாகவும், வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், செல்போன் மூலமாகவும் மட்டுமே பணம் பெற்றுள்ள அந்த கும்பல் திடீரென தங்கள் தகவல் தொடர்பை துண்டித்துள்ளது.
image
இதனால் அதிர்ச்சியடைந்த பணத்தை பறி கொடுத்தவர்கள் அந்த ஆன்லைன் மோசடி கும்பலை தேடத் தொடங்கினர். இந்நிலையில் ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முத்து சென்றாயன் என்பவர், நிலக்கோட்டைக்கு சென்றபோது அந்த மோசடி நிறுவன தமிழக நிர்வாக இயக்குனர் என்று சொல்லிக் கொண்ட மதுரையைச் சேர்ந்த தனியரசு என்பவரை பார்த்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனியரசு, சென்ராயனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது தொடர்பாக சென்ராயன், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார், மதுரையில் பதுங்கி இருந்த தனியரசை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த பணத்தை இழந்தவர்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்தின் முன்பு குவியத் தொடங்கினர். இதையடுத்து காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு பண மோசடி கும்பலை கைது செய்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
image
இந்நிலையில் சென்றாயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனியரசை கைது செய்த தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனியரசு வங்கி கணக்கில் இருந்து கடந்த வாரம் ஒரு கோடி ரூபாய் பண பரிவர்த்தனை ஆகியிருப்பது தெரிய வந்ததுள்ளது. இதனை அடுத்து தனியரசு கூட்டாளிகள் நடத்திய ஆன்லைன் நிறுவனம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சினிமா பட பாணியில் நடந்துள்ள பண மோசடி நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.