வில்லியனுார்: ஊசுட்டேரி படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த மூன்று படகுகள் நள்ளிரவில் மர்மமான முறையில் எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த ஊசுட்டேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகுசவாரி இயக்கப்பட்டு வருகிறது. இங்கு, மூன்று இன்ஜின் படகுகள், மூன்று பைபர் பெடல் படகுகள் உள்ளன. மேலும் வனத்துறைக்கு சொந்தமான மூன்று படகுகளும் உள்ளன.
ஊசுட்டேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்தனர். மாலை, படகுகளை வழக்கம் போல் கரையில் நிறுத்திவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு 1.30 மணியளவில் ஊசுட்டேரி கரையில் நிறத்தி வைத்திருந்த மூன்று பெடல் படகுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன.
அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் ஊழியர்கள் வந்து பார்த்த போது மூன்றுபடகுகளும் எரிந்து சாம்பலாகி கிடந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து படகு குழும பொறுப்பாளர் சித்ராங்கதன் அளித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement