காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்… அகற்றக்கூடாது….! மாறி மாறி கலெக்டரிடம் மனு அளித்ததால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று ஒரு அமைப்பினரும், அகற்றக்கூடாது என மற்றொரு அமைப்பினரும் கலெக்டரிடம் மனு அளித்ததால் பரபரப்பு நிலவுகிறது. காஞ்சிபுரம் நகரில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை மக்கள் நலன் கருதி இடமாற்றம் செய்யவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதில், மேட்டு தெரு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகேயுள்ள புகழ்பெற்ற சித்திரகுப்தர் கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. 24 மணி நேரமும்  சட்ட விரோதமாக செயல்படுவதாகவும், இரவு நேரங்களில் கோயில் அருகே அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டு அப்படியே விட்டு செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியப்படுத்தவதாக கூறப்படுகிறது.  இதுபோல் செங்கழுநீர் ஓடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு குறித்த கூட்டத்திலும் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காந்திய மக்கள் இயக்க நகர தலைவர் ஜெயக்குமார் தலைமையில் மீண்டும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இதேபோல் இந்து மக்கள் கட்சி நிர்வாகி முத்து தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் நற்பணி சங்க மாநில தலைவர் என்.சரவணன் கொடுத்த மனுவில், “கஞ்சா மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக சித்திரகுப்தர் கோயிலுக்கு அருகில் உள்ள மதுபான கடையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்த கடை 30 ஆண்டுக்கு மேலாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. சிவனடியார்கள் போர்வையில் சித்திரகுப்தர் கோயில் பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்பதால் தொடர அனுமதிக்கவேண்டும்” என கூறினார். மாநில இந்து முன்னணியின் காஞ்சி நகர தலைவர் குமரேசனும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்நிலையில் பாஜவின் ஆலய கலாச்சார நிர்வாக பிரிவு சார்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சித்திரகுப்தர் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்…அகற்றக்கூடாது என மாறி மாறி மனு அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.