அங்காரா: துருக்கியில் நேற்று புதிதாக ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் கடந்த 6ம் தேதி மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், முன்பு பூகம்பம் நேரிட்ட அதே ஹாடே மாகாணத்தில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து 5.8 என்ற அளவில் மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் டிஃப்னி என்ற நகரத்தை மையமாகக் கொண்டு நிகழ்ந்த இந்த புதிய பூகம்பம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பூகம்பம் காரணமாக சிரியாவின் அலெப்போ நகரில் 6 பேர் காயமடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான சானா செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் எர்டோகன் ஆய்வு: இதனிடையே, பூகம்பம் ஏற்பட்ட ஷாடே மாகாணத்திற்கு வருகை தந்த அதிபர் தயீப் எர்டோகன், பூகம்பம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூகம்பம் பாதித்த பகுதிகளில் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும் இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்தார். இந்த வீடுகள் மிக உயரமானதாக இருக்காது என்றும் 3 அல்லது 4 மாடி கட்டிடங்களாக மட்டுமே இவை இருக்கும் என்றும், பூகம்பத்தை தாங்கக் கூடிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பூகம்பம் காரணமாக 16 லட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.