நியூயார்க் அமெரிக்காவில், ‘நேஷனல் ஜியாகரபிக்’ நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த மென்பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த புகைப்படம் விருது வென்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த, ‘நேஷனல் ஜியாகரபிக்’ நிறுவனம், புவியியல், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் தொடர்பான பத்திரிகை மற்றும், ‘டிவி’ ஆகியவற்றை நடத்தி வருகிறது.
இந்த பத்திரிகை சார்பில், ஆண்டுதோறும் புகைப்படப் போட்டி நடத்தப்படுகிறது.
இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் என, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகின்றன.
இதில், ‘டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்’ என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமர்ப்பித்த இந்திய வம்சாவளி மென்பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் விருது வென்றுள்ளார்.
மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 5,000 விண்ணப்பங்களில், கார்த்திக்கின் புகைப்படம், ஆண்டின் சிறந்த புகைப்படமாக தேர்வாகி உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள சில்கட் கழுகுகள் சரணாலயத்தில் அவர் எடுத்த புகைப்படம் விருதை பெற்று தந்துள்ளது.
‘நேஷனல் ஜியாகரபிக்’ மே மாத இதழில், கார்த்திக் சுப்ரமணியத்தின் புகைப்படங்கள் வெளியாக உள்ளன.அமெரிக்காவில், மென்பொறியாளராக பணியாற்றி வரும் கார்த்திக், புகைப்படங்கள் எடுப்பதை பொழுது போக்காக வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது, வனவிலங்குகளை படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement