புதுடெல்லி: பாஜவை வீழ்த்துவது நூறு சதவீதம் சாத்தியம் என காங்கிரஸ். எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இத்தாலியில் வௌியாகும் புகழ் பெற்ற ‘கூரியல் டெல்லா செரா‘ என்ற நாளிதழுக்கு ராகுல் காந்தி பிப்ரவரி 1ம் தேதி அளித்த பேட்டியின் விவரங்கள் தற்போது வௌியாகியுள்ளன. அந்த பேட்டியில் இன்னும் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, “இந்த கேள்வி விசித்திரமாக உள்ளது. எனக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் தாடி பற்றிய கேள்விக்கு, “இந்திய ஒற்றுமை நடைப் பயணம் முடியும் வரை தாடியை வெட்ட வேண்டாம் என முடிவு செய்திருந்தேன். இப்போது அதை அப்படியே வளர்ப்பதா, வேண்டாமா என யோசித்து வருகிறேன்” என்றார். இந்திய ஜனநாயகம், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்தியாவில் ஏற்கனவே பாசிசம் நுழைந்து விட்டது. அது தற்போது ஜனநாயக அமைப்புகளை சீர்குலைத்து வருகிறது. நாடாளுமன்றம் சரியாக செயல்படுவதில்லை. அரசுக்கு எதிராக கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய பாசிச போக்குக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு முயற்சி செய்ய வேண்டும். ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சித்தாந்தத்தை எதிர்க்க எதிரணியினர் ஒரே கொள்கையுடன் ஒன்றிணைந்தால் பாஜவை வீழ்த்துவது நூறு சதவீதம் சாத்தியம்” இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.