இந்தூர்: மத்தியபிரதேசத்தில் மதிப்பெண் சான்று வழங்காமல் இழுத்தடித்ததால் கல்லூரி பெண் முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பீமா கல்லூரியின் முன்னாள் மாணவர் அசுதோஷ் வஸ்தவா என்பவர், தனது மதிப்பெண் பட்டியலை வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றார். ஆனால் அவரது மதிப்பெண் சான்றிதழை கல்லூரி நிர்வாகம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அசுதோஷ் வஸ்தவா கையில் பெட்ரோல் கேனுடன் சென்று, கல்லூரி பெண் முதல்வர் (49) மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத கல்லூரி முதல்வர், அலறி துடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினார். அங்கிருந்த ஊழியர்கள், முதல்வர் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு 80 சதவீத அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதற்கிடையே முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த முன்னாள் மாணவர், அங்குள்ள பள்ளத்தில் குதித்து தப்பிக்க முயன்றார்.
ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இந்தூர் எஸ்பி (ஊரகம்) பகவத் சிங் பிர்டே கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வருக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மாணவர் அசுதோஷ் வஸ்தவா, கல்லூரியில் படிக்கும் போது ஏழாவது செமஸ்டரில் தோல்வியடைந்தார். எட்டாவது செமஸ்டரில் விடுபட்ட பாடத்துக்கும் சேர்த்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை என்றும், இதே விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் பேராசிரியர் ஒருவரை அசுதோஷ் வஸ்தவா கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினார்.