வேலூர், அருகிலிருக்கும் சித்தேரி குமரவேல் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், வயது 34. திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்யும் இந்த நபர், கடந்த 18-ம் தேதி (சிவராத்திரி) இரவு 10 மணிக்கு, தன் குடும்பத்துடன் வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலிக்குச் சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு, அதிகாலை வேளையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு நரேஷ்குமாரின் குடும்பத்தினர் திடுக்கிட்டனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, அறைக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுப் போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக, இதுபற்றி அரியூர் காவல் நிலையம் சென்று புகாரளித்தார் நரேஷ்குமார். புகாரைப் பதிவு செய்த போலீஸார், சம்பவ பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், ஒல்லியான உடலமைப்புடைய இளைஞன் ஒருவர் ‘சிவப்பு குல்லா’ அணிந்து திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் என அடையாளம் காணப்பட்டது.
‘அந்த இளைஞர் யார்?’ என போலீஸார் அந்தப் பகுதியில் விசாரித்து கொண்டிருந்த சமயத்திலேயே, அதே சிவப்பு குல்லாவை அணிந்துகொண்டு அந்த இளைஞர் அங்குமிங்குமாக சாவகாசமாக வீதியில் நண்பனுடன் நடந்து கொண்டிருந்தார். போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில், சித்தேரி ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்த 19 வயதே ஆன அர்ஜூன் ராஜ்குமார் என்பதும், இந்த இளைஞன் ஏற்கெனவே அடிதடி வழக்கில் அரியூர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், சமீபத்தில் தான் அவர் பிணையில் வெளியே வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அர்ஜூன் ராஜ்குமாரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைதுசெய்து சிறைக்கு அனுப்பினர்.