வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த மணமக்கள், ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த அஸ்லாம் (24) என்பவருக்கும் காகஷா பானு (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது மணமக்கள் இருவரும் தங்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென பெண் அலறும் சத்தம் கேட்டது. பதற்றம் அடைந்த உறவினர்கள் அங்கு சென்று அறையின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியே பார்த்தனர். அப்போது மணமகள் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தனர். மணமகனும் கையில் கத்தியோடு, ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இருவரது உடல்களையும் மீட்டு அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டு கணவன் மனைவியை குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in