ஒன்றுபடுமா எதிர்கட்சிகள்.?..காய் நகர்த்தும் ஸ்டாலின்..பிடி கொடுக்காத அகிலேஷ்.!

வருகிற 2024 மக்களவை தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் கங்கனம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகின்றன. புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் உள்ளிட்ட காரணங்களால் போன முறை பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது.

ஆனால் வருகிற 2024 தேர்தல் களம் என்பது பாஜகவிற்கு மிகுந்த சவாலாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதனால் தான் சிறுபான்மையினரான முஸ்லீம்களை சென்றடையுங்கள் என பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கட்டளையிட்டார் என கூறப்படுகிறது. மேலும் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படும் பட்சத்தில் பாஜக தோல்வி உறுதி செய்யப்பட்டு விடும் என்பதே பெரும்பாலனவர்களின் கருத்தாக உள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா, உத்தரபிரதேச எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நால்வரும் பாஜகவை தீவிரமாக எதிர்ப்பவர்கள். கூட்டத்தில் பேசிய பரூக் அப்துல்லா, எதிர்கட்சிகளிடையே இருக்கும் பிரச்சனைகளை மறந்துவிட்டு ஓரணியில் நாம் அனைவரும் திரள வேண்டும் எனவும் தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யலாம் எனவும் கூறினார். அதே கருத்தை தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும் கூறினார். பிரதமர் யார் என்பதை காங்கிரஸ் மட்டுமே முடிவு செய்யாது, பெரிய அண்ணனாக காங்கிரஸ் செயல்படாது அனைத்து கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறினார்.

அதேபோல் முக ஸ்டாலினும், இது வெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் இல்லை மாறாக இந்தியாவில் புதிய அரசியலுக்கான தொடக்க விழா என கூறினார். மேலும் எதிர்கட்சிகள் தங்களிடையே இருக்கும் முரண்பாடுகளை கருத்தில் கொண்டால் 2024 தேர்தலில் தோற்பது உறுதி தான் எனவும், காங்கிரஸ் அல்லாத கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை எனவும், அப்படி அமைந்தால் அது பாஜகவிற்கே பலம் சேர்க்கும் எனவும் ஆணித்தரமாக கூறினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு Birthday Gift-ஆக ஒட்டகம்!

ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேசத்தின் எதிர்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் எதிர்கட்சிகளின் கூட்டணி குறித்து பொதுக்கூட்டத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது பேசு பொருளாகியுள்ளது. பாஜகவை தீவிரமாக எதிர்த்து வரும் அகிலேஷ், காங்கிரஸ் மீதும் கடும் விமர்சனங்களை செய்து வருகிறார். பாஜகவும் காங்கிரஸும் ஒன்று தான் என்பது அவரது நிலைப்பாடு. இன்று பேசிய அவர் கூட்டணி குறித்து ஒரு வார்த்தை பேசாமல் ஸ்டாலினை வாழ்த்தி மட்டுமே பேசியது, காங்கிரஸ் இடம் பெறும் கூட்டணியில் அவர் சேர தயங்குவதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அகிலேஷ் யாதவ் போலவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பாஜகவை தீவிரமாக எதிர்த்தாலும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியையே எதிர்பார்க்கின்றனர். அதிலும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் முன்னனியை அமைக்க தெலங்கானா முதல்வர் கடும் முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.