`குமரி ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விநியோகமா?' – விளக்கமளித்த கலெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் ரேஷன் கடைகளில் தங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியைக் கொண்டு சமைத்திருக்கின்றனர். அப்போது சில அரிசிகள் தண்ணீரில் மிதந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அரிசிகள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்ததாகவும் மக்கள் சொல்கிறார்கள். அதனால், தங்களுக்கு பிளாஸ்டிக் அரிசி வழங்கப்பட்டதாகக் கூறி, ரேஷன் கடை ஊழியர்களிடம் பலர் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.

மேலும், அந்த அரிசியை சாப்பிட்ட சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணம் ரேஷன் கடையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்து விநியோகம் செய்வதாக புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மக்களிடையே காணப்படும் ரத்த சோகையைக் கட்டுப்படுத்த பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பயனாளிகளுக்கு வழங்கும் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிலை-I, நிலை-II, நிலை-III என 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இரும்பு, போலிக் அமிலம் மற்றும் பி-12 உள்ளடக்கிய செறிவூட்டப்பட்ட மணிகளை சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் அரிசி ஆலைகளின் மூலமாக கலவை செய்யப்பட்டு செறிவூட்டப்பட்ட அரிசி தயார் செய்யப்படுகிறது.

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்குவதாக புகார் சொன்ன மக்கள்

திட்டம் I -ன் படி மாநிலம் முழுவதுமுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் மார்ச் 2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி மத்திய அரசால் இந்திய உணவு கழகம் மூலம் வழங்கப்பட்டது. திட்டம் II-ன் படி நாடு முழுவதும் ரத்த சோகையைக் கட்டுப்படுத்த 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் III-ன் படி மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுவிநியோகத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவு திட்டம் மற்றும் பிற திட்டங்களில் மார்ச் 2024-க்குள் முழுமையாக வழங்கிட திட்டமிடப்பட்டிருக்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தரத்துடன், அதிக சத்துகள் கொண்டது. எனினும் செறிவூட்டப்பட்ட அரிசியின் உண்மைதன்மை புரியாமல் ஒரு சில பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருவதாக உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி விநியோகம்

செறிவூட்டப்பட்ட அரிசி ரத்த சோகையினைத் தடுக்கிறது, அது மட்டுமல்லாமல் அதிலுள்ள போலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் சிறந்தது. அதிலுள்ள வைட்டமின் பி-12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளைப் புரியாமல் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்பட்டு வருவதாக பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை நம்பவேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி கலெக்டர் பி.என்.ஸ்ரீதர்

இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி (D.S.O) விமலா ராணியிடம் பேசினோம். “நூறு சாதாரண அரிசிக்கு ஒரு செறிவூட்ட்டப்பட்ட அரிசி என்ற கணக்கில் முறையாக கலந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பிப்ரவரி மாதம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உணவுக்காக செறிவூட்டப்பட்ட அரிசிதான் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இந்த அரிசியில் நன்மைகள் அதிகம் இருக்கின்றன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.