மதுரை மாவட்டம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் அதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அதில் சில நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே பதிவாகி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்தான விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் 1578 காவல் நிலையங்களில் 12 முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சி பதிவுகளை சேமிக்கும் விதமாக அதி நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.