‘யார் பிரதமர் வேட்பாளர்..’ – காங்கிரஸ் தலைவர் கார்கேவின் அனல் பேச்சு.!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘எனக்கு 81 வயதாகிறது, ஸ்டாலினுக்கு 70வது வயது. எனவே என்னை விட இளையவரான ஸ்டாலினை வாழ்த்த எனக்கு அடிப்படை தகுதியுள்ளது. நீண்ட ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்றிட ஸ்டாலினை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். டாக்டர் கருணாநிதி இனியும் பல காலங்களுக்கு நினைவு கூறப்படுவார்.

தமிழ்நாட்டை பாதுகாத்து வரும் ஸ்டாலின், கருணாநிதியின் வார்ப்பு என்பதை நிருபித்துள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளை சரியாக பின்பற்றி வருபவராக முக ஸ்டாலின் உள்ளார்.

நவீன தமிழ்நாட்டை உருவாக்க முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பெரியார், அண்ணா உள்ளிட்டோரின் சமூக நீதி கொள்கைகளை ஸ்டாலின் பறைச்சாற்றி வருவது பாராட்டதக்கது. தமிழ்நாடு எப்போது வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் அரசியல் பாரம்பரியம் மிக்கது தமிழ்நாடு. நாட்டிற்கு சிறந்த தலைவர்கள், குடிமைப்பணி அதிகாரிகள், அறிவுஜீவிகள், சிறந்த எழுத்தாளர்களை தமிழ்நாடு வழங்கி வருகிறது.

ராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, பெரியார், காமராஜ், அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட சிறந்த தலைவர்கள் நாட்டின் வரலாற்றில் எப்போதும் நீடிப்பார்கள். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி ஆகிய காரணிகளில் தமிழ்நாடு நாட்டிற்கு முன் மாதிரியாக திகழ்கிறது. இலவச கல்வி, மதிய உணவு திட்டம் ஆகியவை தமிழ்நாட்டில் தான் முதன் முறை அமல்படுத்தப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிறகு மாநிலத்தை தொழில்மயமாக்கியதிலும் தமிழ்நாடு தான் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல சிறப்பு திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எப்போதுமே தமிழ்நாடு மாநிலம் முற்போக்கு சமுதாயமாக இருந்து வந்துள்ளது.

மாநிலத்தில் சமூகநீதி மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்து செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, அறிவியல் பூர்வமான சிந்தனையையும் பன்மைத்துவத்தையும் கட்டி எழுப்பினார். அதே சிந்தனை வளத்தை தான் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின் ஆகியோரும் இங்கு மேம்படுத்தி வருகின்றனர்.

நாங்கள் கருத்தியல் ரீதியாக ஒருங்கிணைந்துள்ளோம். சட்ட மேதை அம்பேத்கர் வழங்கிய அரசியல் அமைப்பு சட்டம் இந்தியா எனும் மாபெரும் கட்டுமானத்தை அஸ்திவாரத்தை வழங்கியது. சகோதரத்துவம், சமத்துவம், வளர்ச்சி ஆகிய பாதைகளில் நாட்டு மக்களை வழிநடத்தியது அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் தான். இதே கொள்கைகளை தான் திமுக அரசும் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே கூட்டணி 2024 மக்களவை தேர்தலிலும் அமைத்து வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ராகுல் காந்தி இங்கிருந்து தான் தனது யாத்திரையை தொடங்கினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு Birthday Gift-ஆக ஒட்டகம்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு துளியும் இடம் இல்லை என்பதை மக்கள் நிருபித்து வருகிறார்கள். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை நடத்தவிடாமல் ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். நீதி அமைப்பு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பாஜகவினர் கைப்பற்ற துடிக்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது தான் பாஜகவின் உச்சபட்ச இலக்கு. பல பாஜக எம்பிக்களும், தலைவர்களும் இதை பொது வெளியில் பேசியுள்ளனர்.

நமது அரசியலமைப்பை காப்பாற்ற, நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பிரிவினைவாத தீய சக்திகளுக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். யார் பிரதமர் வேட்பாளர், யார் வழிநடத்த வேண்டும் என காங்கிரஸ் சொல்லவில்லை. நாம் ஒருங்கிணைய வேண்டும்’’ என கார்கே பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.