புதுடெல்லி:காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “செபியின் செயல்பாடுகள், விதிகள், அதன் விதிமீறல்கள் பற்றி மட்டுமே உச்சநீதி மன்றத்தால் விசாரணை நடத்த முடியும். அதானி விவகாரத்தில் உண்மையை கொண்டு வர உச்சநீதி மன்றத்தால் முடியாது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்தேன். அதானிக்கும், மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்த உண்மையை உச்சநீதி மன்ற குழுவால் வௌிக்கொண்டு வர முடியாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டால் தான் அதானி, மோடி உறவு பற்றிய உண்மை வௌிச்சத்துக்கு வரும். தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு அதானியின் மோசடிகளை சட்டப்பூர்வமாக்கி, அதானியை விடுவிக்க செய்யப்படும் முயற்சி. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 13ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் மீண்டும் பிரச்னை எழுப்பும்” இவ்வாறு கூறினார்.