புதுடில்லி மஹாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், பா.ஜ., கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் சமீபத்தில் நடந்தன.
இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு, அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
இதில், மேற்கு வங்கத்தின் சாகர்திஹி தொகுதியில் நடந்த தேர்தலில், காங்கிரசின் பைரான் பிஸ்வாஸ், ஆளுங் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை, 23 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
”காங்கிரசும், இடது சாரி கட்சிகளும் மறைமுக கூட்டணி அமைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளன,” என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளுங் கட்சி
தோல்வி அடைந்துள்ளது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இதில் சின்ஞ்வாட் தொகுதியில், பா.ஜ.,வின் அஸ்வினி ஜக்தாப், தேசியவாத காங்கிரசின் நானா கடேயை, 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கஸ்பா பெட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரவீந்திர தங்கேர், பா.ஜ.,வின் ஹேமந்த் ரசனேயை, 11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அகில ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் சார்பில், பா.ஜ., ஆதரவுடன் போட்டியிட்ட சுனிதா சவுத்ரி வெற்றி பெற்றார்.
இவர், காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் மஹதோவை, 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முன்னதாக, அருணாச்சல பிரதேச மாநிலம், லும்லா தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் தேர்தல் நடக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்