திருச்சி மாவட்டத்தில் உள்ள கே. உடையார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி கடந்த மாதம் 27ஆம் தேதி கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் சென்று பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முன்னாள் ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ எதிர்பாராத விதமாக ராஜ்குமாரின் ஆட்டு குட்டி மீது மோதியுள்ளார். அதில், ஆட்டு குட்டி தூக்கி வீசப்பட்டு வலியால் துடித்தது.
இருப்பினும், ஜான் பிரிட்டோ இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராஜ்குமார் ஜான் பிரிட்டோவை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த ஜான் பிரிட்டோ தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜ்குமாரை சுட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் பிரிட்டோவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கை துப்பாக்கியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.