குஜிலியம்பாறை: பாலியல் தொல்லை மற்றும் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற காதலியை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). பெயிண்டர். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (36). கணவர் இறந்து விட்ட நிலையில், கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார், மகேஸ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும் 3 பவுன் நகைகளை முத்துக்குமார் வாங்கியுள்ளார். மகேஸ்வரி திரும்பக் கேட்டபோது தர மறுத்துள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டும், பாலியல் தொந்தரவு செய்தும் வந்துள்ளதார்.
கடந்த பிப். 28ம் தேதி இரவு சி.அம்மாபட்டியில் இருந்து தவசிபட்டி செல்லும் காட்டுப்பகுதிக்கு இருவரும் டூவீலரில் சென்றுள்ளனர். பின்னர் காட்டில் தனிமையில் இருந்தபோது, மகேஸ்வரி பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முத்துக்குமார் மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். இதில் அவருக்கு இடுப்புக்கு கீழ் பகுதியில் தீப்பற்றி பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து டூவீலரை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து மகேஸ்வரியை கைது செய்தனர்.