தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் திமுக சார்பில் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாஜி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினையும், திமுக ஆட்சியையும் புகழ்ந்து பேசியுள்ளார். விழா மேடையில் பேசிய அவர் “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்கள் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் தமிழகத்தின் சிறப்பான திட்டங்கள் ஆகும். தமிழகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மாநிலமாக மாற்றி உள்ளார். அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல” என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதை இந்த பிறந்தநாள் விழா மேடை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.