வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை: திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அவசர விளக்கம்

திருப்பூர்: வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூரில் இருந்து வெளியேறுவதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வாட்ஸ்-அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் 3 வீடியோக்கள் பரவி வருகிறது. இதில் ஒரு வீடியோவானது திருப்பூர் மாநகரில் கடந்த ஜன.14-ம் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மற்ற 2 வீடியோக்கள் எதுவும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தவை இல்லை. இவை பொய்யாக சித்தரித்து போடப்பட்டு வருகிறது. இது வதந்தியாகும். அவை கணக்கெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் நம்ப வேண்டாம். வட மாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பின் தகவல் தெரிவிக்க, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் 5 மொழிகள் தெரிந்த, வட மாநிலத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளே இருப்பார்கள்.

இதற்காக 24 மணிநேரமும் செயல்படும் அலைபேசி எண் 9498101320 மற்றும் 0421-2970017 எண்களில் வடமாநிலத்தவர்கள் தொடர்பு கொள்ளலாம். இங்கு அனைத்து மாநிலத்தினரும் தகுந்த பாதுகாப்புடன் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

வதந்தியாக பரவும் வீடியோக்களை வடமாநிலத் தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம். காவல் ஆய்வாளர்கள் மூலம், அந்தந்த பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருந்து வருகிறது. அது தொடர்ந்து பாதுகாக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.