திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே தென்மலை கருப்பு கோயில் பகுதியில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் தனபால் (60) விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து சிறுமலையைச் சேர்ந்த கருப்பையா(50), ராஜாகண்ணு(50) ஆகியோர் 5 ஏக்கர் நிலத்தை 2 வருடங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி உள்ளனர். பின்னர் நிலத்தை அளந்து பார்த்தபோது, நான்கரை ஏக்கரே இருந்துள்ளது. எனவே அரை ஏக்கர் நிலத்திற்கான பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் கருப்பையா, ராஜாகண்ணு இருவரும், தனபாலிடம் சென்று பணம் கேட்டுள்ளனர் அப்போது தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தனபால், வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து இருவர் மீதும் சுட்டுள்ளார். இதில் கருப்பையாவிற்கு வலது பக்க தொடைப்பகுதி, இடது பக்க வயிறு, வலது பக்க முழங்கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபோல் ராஜாகண்ணுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.