IND v AUS: இந்திய அணியைக் காலி செய்த லயன்; எளிய வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா! சொதப்பியது எங்கே?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் கே.எல்.ராகுலுக்குப் பதில் களமிறங்கிய கில் 21 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ குனமான் 5 விக்கெட்டுகளை விழ்த்தியிருந்தார்.

ஜடேஜாவின் அபாரமான சுழல் பந்து வீச்சால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்திருந்தது.

இரண்டாவது நாளை தொடங்கிய கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் சற்று பொறுமையாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். 19 ரன்கள் எடுத்திருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். அதன் மூலம் இன்றைய நாளில் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. அடுத்து கேமரூன் கிரீன், உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.

Ashwin

அஷ்வின் – உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா அணி கடைசி 11 ரன்களில் மட்டுமே ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 197 ரன்கள் எடுத்து 88 ரன்கள் முன்னிலையிலிருந்தது ஆஸ்திரேலியா அணி.

அடுத்து, இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸை ரோஹித் சர்மா, கில் ஆகியோர் தொடங்கினர். நாதன் லயனின் அபாரமான சுழல் பந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். லயன் பந்தில் கிளீன் போல்டாகி ஐந்து ரன்களில் நடையைக் கட்டினார் கில். மீண்டும் லயனின் அசத்தலான ஸ்பின்னில் ரோஹித் சர்மா எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

புஜாராவும் விராட் கோலியும் களத்தில் நின்று தேவையான ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். மேத்யூ குனமான் பந்தில் லெக் சைட் பக்கம் அடிக்க முயன்ற போது எல்.பி.டபிள்யூ ஆனார் விராட் கோலி.

தேநீர் இடைவெளிக்குப்பின், புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் நின்று ஆடினர். இருவரும் அட்டாக்கிங் பேட்டிங் செய்ததால் இந்தியாவுக்கு வேகமாக ரன்கள் வரத் தொடங்கின. குனமான் ஓவர்களில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் ஸ்ரேயாஸ் ஐயர். மிட்செல் ஸ்டார்க் பந்தில் கவாஜா அசத்தலாக கேட்ச் பிடிக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் நடையைக் கட்டினார்.

Team Aus

இந்த ஒரு விக்கெட் இந்த ஆட்டத்தின் முக்கியமான திருப்பமாக அமைந்தது. கே.எஸ்.பரத் 3 ரன்களில் வெளியேறினார். புஜாரா மட்டும் தனது தனித்துவமான ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தார். தனி ஒருவராகப் போராடித் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகள் விளாசி, ரன்களை எடுத்து, அரை சதம் கடந்தார். பின்னர் அவரும் லயன் பந்தில் ஸ்லிப்பில் கேப்டன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா, 100 ரன்களுக்கு மேல் லீடு அடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நம்பிக்கையை லயனின் சுழல் உடைத்தது. அவரின் அசத்தலான சுழல் பந்து வீச்சால் இந்திய அணி மீண்டும் ஒரு ஆல் ஆவுட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அஷ்வின் 16 ரன்களில் அவுட் ஆனார். இறுதியாக சிராஜின் விக்கெட்டையும் லயனே வீழ்த்தினார்.

இரண்டாவது நாள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்து 75 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. லயனின் நேர்த்தியான பௌலிங்கால் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக சரிந்ததன் விளைவு இது. இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளை நாதன் லயன் வீழ்த்தியிருக்கிறார். அவர் ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்ப் லைனில் டைட்டாக வீசியது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின.

பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் நாதன் லயன். சிறந்த சுழல் பந்துவீச்சால் ஆடுகளத்தைத் தனக்கானதாக மாற்றி விக்கெட் மழை பொழிந்தார் லயன்.

Lyon

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை அவர் தன் கணக்கில் சேர்த்திருக்கிறார்.

அபாரமான பந்து வீச்சால் இந்திய அணியை இரண்டு இன்னிங்ஸிலிலும் குறைவான ரன்களில் சுருட்டி வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது ஆஸ்திரேலியா அணி. நாளை நடக்கும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி எந்தளவுக்கு ஆஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.