
ஹிந்தி தெலுங்கை, தொடர்ந்து மலையாளத்திலும் வில்லனாக மாறிய பிரித்விராஜ்
மலையாள நடிகர் பிரித்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகமானதே கே.வி ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் என்கிற திரைப்படத்தில் ஒரு சாடிஸ்ட் வில்லனாக நடித்ததன் மூலம் தான். அந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் அதன்பின் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார். இடையில் ஹிந்தியில் மட்டும் ஒன்றிரண்டு படங்களில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும், தெலுங்கில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கி வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரித்விராஜ். இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் குறுகிய பட்ஜெட்டில் உருவாகி 50 கோடிக்கு மேல் வசூலித்த ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் மற்றும் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பசில் ஜோசப் கூட்டணியில் மீண்டும் உருவாகி வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.