அமெரிக்காவின் புளோரிடாவின் சார்லோட் கவுண்டியில் குழாய் நீரில் தனது முகத்தையும், மூக்கையும் கழுவிய நபருக்கு சில நாள்களில் தலை வலி ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சோதித்ததில் அவரை `Naegleria fowleri’ எனும் அமீபா தாக்கியிருப்பது தெரியவந்தது. உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அதைத் தொடர்ந்து, அவர் குழாய் நீரில் முகத்தையும், மூக்கையும் கழுவியதால் மூளையை உண்ணும் Naegleria fowleri எனும் அமீபாவின் தாக்குதலால்தான் அவர் மரணித்திருக்கிறார் என புளோரிடா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த அமீபா குறித்து புளோரிடோ வழங்கிய எச்சரிக்கையில், “இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை நோக்கி பயணிக்கும். பின்னர் மூளை திசுக்களை அழித்து அதை உண்ணத்தொடங்கும். இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் சேதப்படுத்தும் தொற்றுநோய் ஏற்படுத்தும். இந்தத் தொற்று பெரும்பாலும் ஆபத்தானது.
இந்த அமீபாவால், தாக்கப்பட்டவர்களுக்கான ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கடினமான கழுத்து வலி ஆகியவை அடங்கும். இந்த நோய் தீவிரமடைந்தால், மாறுபட்ட சமநிலையற்ற மன நிலை, பிரமை பிடித்தல், கோமாவுக்கு கூட வழிவகுக்கும். 1962 – 2021 க்கு இடையில் இந்த அமீபா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவிகிதம் பேர் இறந்துவிட்டனர். 154 பேரில் நான்கு நோயாளிகள் மட்டுமே அமெரிக்காவில் தொற்றுநோயிலிருந்து தப்பியதாகவும் பதிவுகள் கூறுகின்றன.

எனவே, ஃபுளோரிடோவில் வாழும் குடிமக்கள் குழாய் நீரில் முகத்தைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நோய் குறித்து பேசிய டாக்டர் மொபீன் ரத்தோர், “தற்போது இருக்கும் சூழலில் குழாய் நீரில் நேரடியாக முகத்தை கழுவுவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், குடியிருப்பாளர்கள் தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து பின்னர் அதைப் பயன்படுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.