புதுடில்லி:சர்க்கரை ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை, தற்போதிருக்கும் 60 லட்சம் டன் என்பதிலிருந்து, அதிகரிக்கும் எண்ணம் அரசிற்கு இல்லை என, மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான, நடப்பு 2022 – 23 சந்தை ஆண்டுக்கு, 60 லட்சம் டன் எனும் அளவுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம் என, மத்திய உணவு அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2021 – 22ல் 110 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது சர்க்கரை உற்பத்தி, கடந்த ஆண்டை விட 9 லட்சம் டன் குறைந்துள்ளது. சர்க்கரை உற்பத்தி மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நடப்பு சந்தைப்படுத்துதல் ஆண்டில், உற்பத்தி குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் கரும்பு உற்பத்தி கடந்த ஆண்டு 137 லட்சம் டன் ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில் 121 லட்சம் டன் ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
![]() |
இவற்றை கருத்தில் கொண்டு, ஏற்றுமதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, சர்க்கரை ஆலைகள் சங்கம் கூறியதாவது:
நடப்பு ஆண்டில் எத்தனால் உற்பத்திக்கு 45 லட்சம் டன் கரும்புகள் திருப்பி விடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி குறையும்.
கடந்த 2021 – 22 சந்தைப்படுத்துதல் ஆண்டில், எத்தனால் உற்பத்திக்கு 32 லட்சம் டன் கரும்புகள் மட்டுமே திருப்பி விடப்பட்டன.
இவ்வாறு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
