ஆசிரமம் ஒன்றில் பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை தாக்கி வாயில் எரியும் கட்டையை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசாமுண்ட் மாவட்டம் பதேராபலி கிராமத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அங்கு, அபான்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது குடும்பத்தினர் பேய் ஓட்ட வேண்டும் என கூட்டி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த சிறுமி தங்களுக்கு வழங்கிய பாயாசத்தில் விஷம் கலந்துவிட்டார் என்று கூறி ஆசிரம நிர்வாகியும், இரண்டு சீடர்களும் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், சிறுமியின் வாயில் எரியும் மர கட்டையை திணித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதில் சிறுமி பலத்த காயம் அடைந்தார். இந்த விவகாரம் குறித்து சிறுமியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரமத்திற்கு பேய் ஓட்ட வேண்டும் என்று இதுபோல் பலர் வருவதாகவும், இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரமத்தின் செயல்பாடுகள், அதன் நிலம் உள்ளிட்ட பிற விவரங்களை பற்றி மாநில வருவாய் துறை கேட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in