ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், மனம் உடைந்த சென்னை கேகே நகரை சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கேகே நகர் சேர்ந்த சுரேஷ் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீதுள்ள மோகத்தால், அதிகளவு பணத்தை கட்டி விளையாடி வந்துள்ளார். பணத்தை இழக்க இழக்க, அதை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என தொடர்ந்து பணத்தை போட்டு விளையாடிய சுரேஷ், சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிகிறது. எவ்வளவு முயற்சித்தும் விட்ட பணத்தை திரும்ப மீட்க முடியாததால், மனம் உடைந்த சுரேஷ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். மனவேதனையின் உச்சத்தில் இருந்த சுரேஷ், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது மனைவி ராதாவிற்கு கடிதம் எழுதிவிட்டு மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் காணாமல் போனது குறித்து, அவருடைய மனைவி ராதா, கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கேகே நகர் காவல் துறையினர் சுரேஷை தேடி வந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலையின் பின்புறம் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததன் பேரில் அங்குசென்ற காவல்துறையினர், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அது சுரேஷ் தானா என அடையாளம் காணுவதற்கு, காணாமல் போன சுரேஷின் மனைவி ராதாவை அழைத்து அடையாளம் காட்டினர். இந்நிலையில் உயிரிழந்தது சுரேஷ் தான் என்பதை ராதா உறுதிப்படுத்திய நிலையில், தற்கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் சென்னை தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது ஆன்லைன் ரம்மிக்கு மற்றொரு பலி ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
