'இந்தூர் ஆடுகளத்திற்கு 3 தகுதி இழப்பு புள்ளி வழங்கியது கடுமையானது' – முன்னாள் கேப்டன் கவாஸ்கர்

புதுடெல்லி,

இந்தூர் ஆடுகளத்துக்கு 3 தகுதி இழப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அறிவித்தார். இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் 14 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம். ஒரு மைதானம் 5 ஆண்டு காலத்துக்குள் 5 மற்றும் அதற்கு அதிகமான தகுதி இழப்பு புள்ளியை பெறும் பட்சத்தில் அந்த மைதானத்தில் ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்கப்படும்.

இந்நிலையில் ஐ.சி.சி. எடுத்து இருக்கும் நடவடிக்கைக்கு இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

“இந்தூர் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஸ்கோரை பார்த்தாலே இது பேட்டிங் செய்வதற்கு கடினமானது என்பது தெரியும். இந்த காரணத்துக்காக 3 தகுதி இழப்பு புள்ளிகளை தண்டனையாக வழங்கி இருப்பது மிகவும் கடுமையானதாகும். மிகவும் கடினமானதாக இருந்து இருந்தால் முதல் இன்னிங்சில் உஸ்மான் கவாஜா-லபுஸ்சேன் இணை 96 ரன்களும், 2-வது இன்னிங்சில் டிராவிஸ் ஹெட்-லபுஸ்சேன் ஜோடி 77 ரன்களும் எடுத்து இருக்க முடியாது.

கடந்த டிசம்பர் மாதம் பிரிஸ்பேன் காப்பா மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி 2 நாளுக்குள் முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் பந்து தாறுமாறாக எகிறியது. வேகப்பந்து வீச்சாளர்கள் அபாயகரமானவர்களாக தெரிந்தார்கள். வேகப்பந்து வீச்சால் கடுமையான காயம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

ஆனால் அந்த ஆடுகளத்துக்கு எத்தனை தகுதி புள்ளிகள் (சராசரிக்கு குறைவானது என்று போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சனால் மதிப்பிடப்பட்ட பிரிஸ்பேன் ஆடுகளத்துக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி அளிக்கப்பட்டது) தண்டனையாக வழங்கப்பட்டது. அந்த போட்டியின் நடுவராக இருந்தது யார் என்பது எனக்கு தெரியாது. ஆடுகளத்திற்கு தகுதி இழப்பு புள்ளி வழங்குவதில் சரிசமமான நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.