உதயநிதி ஸ்டாலின் பாலிடிக்ஸ்… அதிமுக, பாஜக உள்ளே வெளியே ஆட்டம்… புது ரூட்டில் அட்வைஸ்!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த
திமுக
சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, சின்னியம்பாளையம் அருகே உள்ள பிருந்தாவன் மஹாலில் 81 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருந்தார். இந்த திருமண நிகழ்வை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார்.

இலவச திருமண ஏற்பாடு

மணமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தங்க தாலி, பட்டு புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்து விளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், பீரோ உள்ளிட்டவை அடங்கும். இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு நடைபெற்றது சுயமரியாதை திருமணம்.

சுயமரியாதை திருமணம்

இதற்காக தான் தந்தை பெரியார் போராடினார். சட்ட வடிவம் கொடுத்தவர்கள் அண்ணாவும், கலைஞரும். மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அதிமுக, பாஜக போல இருந்து விடாதீர்கள். ஒருவர் காலி ஒருவர் விழுந்து விடாதீர்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை வரும். புரிதல் வேண்டும்.

அரசியல் பேசுங்கள்

உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள். இதை உங்களிடம் உறுதி மொழியாக கேட்கிறேன். இந்தியை திணிக்கிறார்கள். தமிழ் மொழியை காக்க நாம் பாடுபட வேண்டும். வீட்டில் அரசியல் பேசுங்கள். இந்தியாவில் என்ன செய்கிறார்கள்? என்னென்ன திட்டங்கள் தீட்டி உள்ளார்கள்? என்னென்ன நிறைவேற்றப்பட்டுள்ளது? என பேசுங்கள்.

அதிமுக – பாஜக அரசியல்

திமுக அரசு பொறுப்பேற்கும் போது 5 லட்சம் ரூபாய் கடன். தற்போது நிலைமை பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக கொரோனா காலத்தில் மருத்துவமனைக்குள் சென்றவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக, பாஜகவினர் வந்தார்கள். அப்புறம் சென்று விட்டார்கள். அதன்பிறகு எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாது.

உள்ளே வெளியே ஆட்டம்

கட்சி எனக்கு சொந்தம். கொடி எனக்கு சொந்தம் என வருவார்கள். மீண்டும் உள்ளே சென்று விடுவார்கள். பிறகு இடைத்தேர்தலுக்கு வந்தார்கள். படுதோல்விக்கு பின் மீண்டும் சென்றுவிட்டார்கள். அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வருவார்கள். மீண்டும் மறைந்து விடுவார்கள். தற்போது தேர்தல் எதுவும் இல்லை. ஆனாலும் நாங்கள் மக்களோடு இருந்து பணியாற்றுகிறோம். கலைஞரும் தமிழும் போல, தலைவரும் உழைப்பும் போல வாழ வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழு கண்காட்சி

முன்னதாக சாரஸ் மேளா 2023 என்றா மகளிர் சுய உதவி குழுக்களின் தேசிய அளவிலான விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவி குழுக்கள் அரங்கம் அமைத்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மகளிர் சுய உதவி குழுக்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.