ஜோலார்பேட்டை: குடியாத்தம் அருகே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியாள் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள யார்டு பகுதியில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பராமரிப்பு பணி காரணமாக தாமதமாக செல்லும் ரயில்களும், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குடியாத்தம் ரயில்வே யார்டு பகுதியில் 2 நாள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நேற்று பராமரிப்பு பணியின் காரணமாக பீகார் மாநிலம் தானாபூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பிற்பகல் 12.30 மணி அளவில் 4 வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
இதேபோன்று கேரள மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 5வது பிளாட்பாரத்தில் பிற்பகல் 12.45 மணிக்கு வந்து நின்றது. இந்நிலையில், குடியாத்தம் ரயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனை அடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், இதேபோன்று பராமரிப்பு பணிகள் இன்றும் நடைபெற உள்ளதால் இந்த 2 ரயில்களும் இன்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் நேற்றுபோல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.