புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பெயர் இடம்பெறவில்லை. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்னையை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்துவதாக கூறி 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகிய 9 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இடம்பெறவில்லை.
அந்த கடிதத்தில்:
எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்களின் அணுகுமுறையால் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியன தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு ஆம்ஆத்மி மூத்த தலைவர், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைதை தொடர்ந்து, தற்போது சில எதிர்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.