ட்விஸ்ட் கொடுத்த சிடிஆர்.. அதிர்ச்சியில் அண்ணாமலை.. ஏறுமுகத்தில் ஈபிஎஸ்..!

தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் இன்று (மார்ச்5) பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான
எடப்பாடி பழனிசாமி
முன்னிலையில் சிடிஆர் இணைந்ததாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜகவின் வலது கரமாக இருந்து வந்த சிடிஆர் நிர்மல் குமாரின் ராஜினாமா பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க உள்ள முக்கிய பாஜக தலைவர்களின் கருத்துக்களை சோசியல் மீடியாவில் உடனுக்குடன் பதிவிட்டு பாஜக மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் மீது கவனம் செலுத்தி விளக்கம் அளித்து வந்தார் சிடிஆர் நிர்மல்.

திமுகவின் பலம் வாய்ந்த ஐடி விங்கிற்கு மத்தியில் பாஜகவின் நல திட்டங்கள், செயல்பாடுகளை சோசியல் மீடியா மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். இந்த நிலையில்,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நிர்மல் குமாருக்கும் இடையே ஒரு வருட காலமாக நிலவி வந்த பனிப்போரின் விளைவாக இன்று பாஜகவில் இருந்து விலகியுள்ளார் நிர்மல் குமார். பொறுப்பை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கூட்டணி கட்சியான அதிமுகவில் அவர் இணைந்தது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ராஜினாமா குறித்த கடிதத்தில் அண்ணாமலையை பற்றி நிர்மல் குமார் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பேசுபொருளாகியுள்ளது. அதில் அண்ணாமலையை, சொந்தகட்சி நிர்வாகிகளையையே வேவு பார்க்கும் அல்பத்தணம் கொண்டவர், கமலாலயத்தை வியாபாரம் ஆக்கியவர், மனநலம் குன்றியவர், திமுக அமைச்சருடனே பேரம் பேசுபவர் என்றும் 420மலை என்றும் தமிழகத்திற்கே கேடு என்றும் சாடியுள்ளார்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக பாஜகவினர் பலர் நிர்மல் குமாரை விமர்சத்திருந்தனர். மேலும், திமுகவுக்கு விலை போய்விட்டதாகவும் அவரை சாடி வருகின்றனர். ஆனால், சிடிஆர் நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவிலேயே இணைந்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தலில் 20 சீட்டுகளை பெற்று போட்டியிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியோ அதிமுக தலைமையில்தான் எப்போதும் கூட்டணி என்று உறுதியாக உள்ளார். இதனாலேயே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி க்ரூம் ஆதரவுக்காக தேடி வந்தபோது காத்திருக்க செய்து அலைக்கழித்ததாக அண்ணாமலை மீது ஒரு விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், கட்சியில் ரைட் ஹேண்டாக மாநில பொறுப்பில் இருந்த சிடிஆர் கட்சியைவிட்டு சென்று அதிமுகவில் இணைந்திருப்பது அண்ணாமலைக்கு பின்னடைவையும், எடப்பாடிக்கு ஏறுமுகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.