மைசூரு : ம.ஜ.த.,வின் பஞ்சரத்னா யாத்திரை நிறைவு விழா, வரும் 26ல் மைசூரில் நடக்கிறது. 100 கி.மீ., துாரத்துக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை திறந்த வாகனத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் வகையில், 2022 நவம்பர் 18ல், மாநில கட்சியான ம.ஜ.த., ‘பஞ்சரத்னா யாத்திரை’ என்ற பெயரில் கோலார் மாவட்டம், முல்பாகலில் துவங்கியது.
அன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இந்த யாத்திரை வரும் 26ம் தேதி மைசூரில் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாபெரும் மாநாடு நடத்தப்படும். தனது அரசியல் வரலாற்றில் இது ஒரு தலைசிறந்த மாநாடாக இருக்கும். இதுவரை யாரும் செய்யாத மாநாடாக அமையும் என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு புறநகரில் உள்ள கும்பலகோடில் இருந்து, மைசூரு வரை 100 கி.மீ., துாரத்துக்கு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடா திறந்த வாகனத்தில் அழைத்து செல்லப்படுகிறார். இதற்கான சிறப்பு வாகனம் வடிவமைக்கப்படுகிறது. ‘மண்ணின் மைந்தன்’ என்று முன்னிலைப்படுத்தி ஓட்டு வங்கியை பலப்படுத்துவது குமாரசாமியின் திட்டமாகும்.
பழைய மைசூரு மண்டலத்தில் ம.ஜ.த.,வின் செல்வாக்கு அழியவில்லை என தேசிய கட்சிகளுக்கு நிரூபிக்கவே பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement