
பிரிட்டனின் மிகப்பெரிய மசூதியான பைத்துல் ஃபுதுஹ் மசூதி (Baitul Futuh Mosque) 8 வருடங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு தீ விபத்தில் சேதமடைந்த மசூதி, சீரமைப்புப் பணிகள் முடிந்து தற்போது திறக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நீக்ரோஸ் ஓரியன்டல் மாகாணத்தின் கவர்னர் உட்பட ஆறு பேர், மத்திய பிலிப்பைன்ஸில் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை அந்த நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் `அரசியல் சார்ந்த கொலை’ என்று குற்றம்சாட்டினார்.

ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய், உக்ரைனிலுள்ள ரஷ்யப் படைகளை ஆய்வுசெய்ய உக்ரைனுக்குச் சென்றார். உக்ரைனுக்குச் சென்று அவர், சிறந்து பணியாற்றிய வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.

பெல்ஜியமில் 16 வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய 5 குழந்தைகளைக் கொன்ற Genevieve Lhermitte என்ற பெண் தற்போது சொந்த வேண்டுகோளுக்கு இணங்க கருணைக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் காசிடி என்ற பெண் தொடர்ந்து 23 நாள்கள், மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

சீனா அதன் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 7.2% நிதி அதிகமாக ஒதுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சீன அமைச்சகம் வெளியிட்டிருக்கும் நிதி அறிக்கையின் மூலமாக இது தெரியவந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் அமைந்திருக்கும் இந்துக் கோயில் ஒன்றின் சுவர் புறத்தில், இந்துக்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஹாலிவுட் படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகரான டாம் சைஸ்மோர் தன்னுடைய 61-வது வயதில் காலமானார். இவர், `Saving Private Ryan’, `Natural Born Killers’, `Heat’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்படும் விவேக் ராமசாமி, தான் அதிபரானால், `சீன நிறுவனங்களோடு தொடர்பில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களைத் தடைசெய்வேன்’ என்று பிரசாரம் செய்திருக்கிறார்.