டெல்லி: இந்தியாவில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன.
இதனிடையே, நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவித்த தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ்,’இந்திய டெக்டானிக் பிளேட் ஆண்டுக்கு 5 செ.மீ. வீதம் இந்திய கண்டத்தட்டு நகர்வதால் தட்டுகள் இணையும் பகுதியில் அழுத்தம் அதிகரித்து வருகிறது; கண்டத்தட்டுகள் இணையும் பகுதி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அங்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இமயமலையில் அமைந்துள்ள உத்தராகண்ட்டில் நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகம்,’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சற்று சக்திவாய்ந்ததாக நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 அலகுகளாகப் பதிவானது. குஜராத்தில் அரபிக் கடலை ஒட்டிய துவாரகா புனித நகரமும் இன்று காலையில் நிலநடுக்கத்தால் குலுங்கியது. குஜராத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.