திரிபுராவில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகிறார் மாணிக் சாகா.!

திரிபுராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜகவின் மாணிக் சாகா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். வருகிற 8ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பு.

திரிபுராவில் பாஜக இரண்டாம் முறை ஆட்சி அமைக்க உள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 11 இடங்கள் குறைவாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் முக்கிய எதிர்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் என அந்த கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட திப்ரா மோதா கட்சி 13 இடங்களை கைப்பற்றியது.

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோல் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக் கட்சி ஆரம்பித்த பிரத்யோத் பிக்ரம் மாணிக்யா தேப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி, முதன்முறையாக எதிர்கொண்ட தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை, திப்ரா மோதா கட்சி உடைத்தது. தனிநாடு என்பதே திப்ரா மோதாவின் கோரிக்கையாக இருந்தது. அதனால் திப்ரா மோதாவுடன் பாஜக கூட்டணி அமைக்க விரும்பவில்லை. ஆனாலும் தனிநாடு கோரிக்கையை தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என பாஜக தூது அனுப்பியது.

இந்தநிலையில் திரிபுராவில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீட்டை பாஜகவினர்கள் எரித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியை தகர்த்து முதன்முறையாக திரிபுராவில் ஆட்சியை பிடித்தது பாஜக. ஆட்சியை கைப்பற்றிய உடனேயே அங்கிருந்த லெனின் சிலையை உடைத்தது. இந்தநிலையில் இரண்டாவதாக ஆட்சியை தக்க வைத்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் வீடுகளை பாஜகவினர் தீக்கிரையாக்கி வருவதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டினர்.

மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் திரிபுராவில்பாஜகவின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக திங்களன்று மாணிக் சாஹா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் திரிபுராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

‘எச்சரிக்கை..கவனமாக இருங்கள்..’ – லண்டனில் பாஜகவை கிழித்த ராகுல் காந்தி.!

முதல்வர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு விழா மார்ச் 8ம் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் மாணிக் சாஹா, திரிபுரா மாநிலத்தில் தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பு முதல்வராக பதவியேற்றார். பிப்லப் குமார் தேப்பிற்கு பதிலாக அவர் முதல்வராக பதவியேற்றார். அரசியலில் சேருவதற்கு முன்பு, வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணரான மாணிக் சாஹா, ஹபானியாவில் அமைந்துள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் கற்பித்து வந்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.