1,500 காலாவதியான அரசு பேருந்துகளை கழிவு செய்ய திட்டம்

சென்னை: மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கையை ஏற்கும் பட்சத்தில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள காலாவதியான 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது. நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான அரசின் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வரும் 1-ம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இது தொடர்பான மத்திய அரசு உத்தரவை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. அதில் இருக்கும் சாதக பாதகங்கள் ஆராயப்பட்டு, உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்களது பார்வைக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

விரைவில் மத்திய அரசின் உத்தரவு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு ஏற்கும்பட்சத்தில் தமிழக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள 20,926 பேருந்துகளில் சுமார் 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும். இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் 500 பேருந்துகளும் அடங்கும்.அதேநேரம், போக்குவரத்து சேவைக்குபாதிப்பில்லாத வகையில் படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கிடையே அரசு அறிவித்தபடி 2,213 பேருந்துகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும்.

அதன்படி, ஏற்கெனவே 442 பேருந்துகள் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டு, அதற்கானநிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தில் உள்ளது. அதில் பெறப்படும் தீர்ப்புக்கு ஏற்ப டெண்டர் கோரப்பட்டு, விரைவில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். எனவே, அரசு போக்குவரத்து சேவையில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.