மதுரை: கடந்த 2020 அதிமுக ஆட்சியில் நடந்த விடுதி சமையலர் நியமனங்களில் அனுபவம் இல்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நியமனங்களை ரத்து செய்த தமிழ்நாட்டு அரசு ஆணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்ட ஆதிதிராவிடர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 954 சமையலர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 14.2.2020ல் வெளியானது. இதில், சென்னை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகபட்டினம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்வான 164 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 140 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. மீதமுள்ள 13 மாவட்டங்களில் தேர்வானவர்கள் விபரம் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, கடந்த 27.11.2021ல் சமையலர் நேரடி நியமன நடைமுறையை ரத்து செய்து மாநில அளவிலான தேர்வுக்குழுவின் தலைவர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘‘சில மாவட்டங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். சில மாவட்டங்களில் தேர்வு நடைமுறை முடிந்துள்ளது. சில மாவட்டங்களில் பட்டியல் வெளியிடவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக நியமன நடைமுறையை ரத்து செய்தது ஏற்புடையதல்ல. எனவே, நியமன நடைமுறைகளை ரத்து செய்த தேர்வுக்குழு தலைவரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நியமனத்திற்கு தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், ‘‘நியமன நடைமுறைகளில் பெருமளவில் தவறு நடந்துள்ளது. போதிய அனுபவம் இல்லாதவர்கள் சமையலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முறையாக சமைக்கவில்லை என புகார்கள் பெறப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை வழங்கும் வரை யாரும் நியமன நடைமுறைகளில் தலையிட முடியாது. இதனால் நியமனங்களை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இந்த நிலையில் ரத்து செய்தது சரியா, தவறா என்ற முடிவுக்கு வர முடியாது என்பதால் நியமன நடைமுறைகளை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.