காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாற்றிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில், லண்டனில் நடைபெற்ற சாத்தம் ஹவுஸ் (Chatham House) சிந்தனையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்தக் காணொளியை ராகுல் காந்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மாலினி மேஹ்ரா எனும் பெண், “எனது நாட்டின் தற்போதைய நிலையைக் கண்டு நான் இழிவாக உணர்கிறேன். இந்தியாவின் தற்போதைய நிலை பெரும் வலியை ஏற்படுத்துகிறது. என் தந்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர், பெருமையுடன் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பின்பற்றியவர். அவராலேயே, இந்தியாவின் உண்மைக் கொள்கைகளை தற்போது கண்டறிய முடியவில்லை. மீண்டும் எவ்வாறு நாம், இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறோம்” என்ற கேள்வியை ராகுல் காந்தியை நோக்கிக் கேட்டார். மாலினி மேஹ்ரா, லண்டன் கிளைமேட் ஆப்ஷன் வீக் அமைப்பின் அம்பாசிடராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலினி மேஹ்ராவின் கேள்வியைப் பாராட்டிய ராகுல் காந்தி, “தன்னை ஓர் இந்திய வம்சாவளியாக அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னுடைய தந்தை ஓர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படுத்தி… இந்தியாவின் நிலை பற்றி கருத்துக்கூறுவது வலிமையான ஒன்று. இந்தக் கேள்வி, வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
It is the duty of every Indian, everywhere in the world, to speak up for India’s core values and protect our beloved democracy. pic.twitter.com/MQQweHkch4
— Rahul Gandhi (@RahulGandhi) March 7, 2023
மேலும், அந்தக் காணொளியைத் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ராகுல் காந்தி, “உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் கொள்கைகளைப் பேச வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இவை அனைத்து இந்தியர்களின் கடமையாகும்” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.