தருமபுரி அருகே, அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் வகுப்பறையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மல்லாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தற்போது 11,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று 11,12ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு முடிந்த பின் மாணவ, மாணவிகள், தங்களின் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே மாணவர்கள் இதேபோல் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியில் வாசிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.