தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் ரப்பர், பென்சில் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் பேனாவை மட்டும் பயன்படுத்தி ஒரே ஒரு ஏ4 பேப்பரில் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோயில்களின் தோற்றத்தைப் படம் வரைந்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே வல்லம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இருக்கிறார். இவரது மனைவி சசிகலா. இவர்களது மூத்த மகள் யமுனா (19) தனியார் கல்லூரி ஒன்றில் பேஷன் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட யமுனா ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
ஓவியத்தில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பதே யமுனாவின் லட்சியம். அதற்கான தீவிர முயற்சி மற்றும் பயிற்சியில் இருந்த யமுனா சர்வதேச மகளிர் தினமான நேற்று ஒரு ஏ4 பேப்பரில் 135 கோயில்கள் தோற்றத்தை அச்சு அசலாக வரைந்து சோழன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இது குறித்து யமுனாவிடம் பேசினோம், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்தே ஓவியம் வரையத் தொடங்கினேன். அதில் பெரும் ஈடுபாடு உண்டானதால் ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன். ஒரு போட்டோவை பார்த்து அதில் இருப்பதை சில நிமிடங்களில் அப்படியே வரைந்து விடுவேன். ஓவியம் வரைவதில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் எண்ணம்.
அதற்கான தேடலில் இருந்தபோது கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறிய அளவில் ஒரு படம் மட்டும் வரைந்து சாதனை படைத்திருப்பதை அறிந்து கொண்டேன். நானும் அதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டதால் கோயில்களை வரையலாம் என முடிவு செய்தேன். அதன்படி தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களின் போட்டோக்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு 135 கோயில்கள் வரைந்தேன்.

பின்னர் அந்தக் கோயில்களை ஒரே ஒரு ஏ4 பேப்பரில் வரைவதற்கான பயிற்சி எடுத்தேன். ரப்பர், பென்சில் பயன்படுத்தக்கூடாது. அடித்தல் திருத்தல் இல்லாமல் ஒரே முயற்சியில் பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரையத்தொடங்கினேன். ‘சோழன் புக் ஆப் ரெக்கார்ட்’ புத்தகத்தின் நிர்வாகிகள் முன்பு ஒரே ஒரு ஏ4 பேப்பரில் தஞ்சாவூர் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை மீனாட்சி அம்மன், மயிலாடுதுறை மயூரநாதன் உள்ளிட்ட 135 கோயில்கள் தோற்றத்தை மூன்று மணி நேரத்தில் வரைந்து முடித்தேன்.
135 கோயில்களையும் பார்க்காமலேயே வரைந்த என்னை வியந்து பாராட்டிய அவர்கள் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்தனர். என் பொற்றோர், ஆசிரியர்கள், தோழிகள் அளித்த ஊக்கம் நான் இந்த இடத்துக்கு வந்ததற்குக் காரணம். அடுத்து ஏ3 பேப்பரில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற 300 கோயில்கள் வரைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன் என்றார்.