கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் `இரும்பு மனிதன்’ கண்ணன். இவர் லாரியைக் கட்டி இழுப்பது, இரண்டு பைக்குகளை தூக்கிச் சுமப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார். அடுத்ததாக, ரயில் மற்றும் விமானத்தை கட்டி இழுக்கும் லட்சியத்தை மனதில் வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் பஞ்சாபில் நடந்த ’ஸ்ட்ராங் மேன்’ போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் ஜிம் பயிற்சியாளராகவும் உள்ளார்.

கண்ணனின் மனைவி அஜிலா. மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆணுக்கு நிகர் பெண் எனக் காட்டுவதற்காக, தன் கணவரின் பாணியில் 70 கிலோ எடை உள்ள ஜேசிபி டயரை எட்டு முறை தூக்கி, திருப்பிப் போட்டு உள்ளார் அஜிலா.
இதை சாதாரணமாக செய்து விட முடியாது. நன்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடல் பலம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். இந்த நிலையில் சர்வ சாதாரணமாக அஜிலா டயரை தூக்கிப் போடும் வீடியோ வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தில் தள்ளி உள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அஜிலா, “எங்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. 3 குழந்தைகள் உள்ளனர். உடற்பயிற்சி சாதனைகள் புரிந்துவரும் என் கணவர், என்னையும் உடற்பயிற்சி செய்யும்படி தூண்டினார். ஊக்கம் அளித்தார். நானும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன். என் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் தொடங்கினார். அந்த ஜிம்மில் வரும் பெண்களுக்கு நான் பயிற்சிகள் அளித்து வருகிறேன்.

ஜிம் பயிற்சியாளரான நான் தொடர்ந்து வெயிட் தூக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சிறிய அளவில் டயர்களை தூக்கிப்போட்டு வந்தேன். அதன் பிறகு டயரின் எடையை அதிகரித்தேன். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடம் ஃபிட்னெஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 70 கிலோ எடை கொண்ட ஜேசிபி டயரை எட்டு முறை தூக்கி மறித்துப்போட்டுள்ளேன். திருமணம் ஆனாலும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஆண்களைப்போல நாமும் எதையும் சாதிக்க முடியும்” என்றார்.