சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் கட்டிய ஒன்றரை ஆண்டில் வாரச்சந்தை கடைகளை இடித்ததால் பல லட்ச ரூபாய் வீணாகி உள்ளது. மேலும் ஒப்பந்தப்புள்ளி கோராமல் இடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை நகராட்சியில் செயல்படும் வாரச்சந்தையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.30 லட்சத்தில் மேற்கூரையுடன் கூடிய கடைகள் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு முன்பு, கூடுதலாக ரூ.30 லட்சத்தில் மேற்கூரை இன்றி தளங்கள் மட்டும் உள்ள கடைகள் கட்டப்பட்டன.
இந்நிலையில் அவற்றை முழுமையாக இடித்துவிட்டு, ரூ. 3.89 கோடியில் வாரச்சந்தை கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டிய இரண்டே ஆண்டுகளில் கடைகள் இடிக்கப்பட்டதால், நகராட்சி பணம் பல லட்ச ரூபாய் வீணாகி உள்ளது. மேலும் ஒப்பந்தப்புள்ளி கோராமலேயே கட்டிடங்களை இடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
ஏற்கெனவே, சிவகங்கை நகராட்சி நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், கடைகளை கட்டுவதற்கு அரசு மானியம் போக, நகராட்சி சார்பில் 30 சதவீத நிதியாக ரூ.1.16 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது. நன்றாக இருந்த கடைகளை இடித்து, நகராட்சி நிதியை வீணடித்ததாக பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சோனைமுத்து கூறுகையில், ‘ அரசு கட்டிடம் சிறிதாக இருந்தாலும் ஒப்பந்தப்புள்ளி கோரித்தான் இடிக்க வேண்டும். அதே போல், இடித்ததில் கிடைக்கும் தளவாடப் பொருட்களையும் முறையாக ஏலம் விட வேண்டும். ஆனால், அதை நகராட்சி அதிகாரிகள் செய்யவில்லை.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்களும் ஒப்பந்தப்புள்ளி கோராமல் இடிக்கப்பட்டுள்ளன.
அங்கும் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கும் அரசு மானியம் போக 50 சதவீதம் ரூ.1 கோடி நகராட்சி சார்பில் ஒதுக்க வேண்டும்.
நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில் பணம் தேவையின்றி செலவழிக்கப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி மண்டல நிர்வாக பொறியாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன், என்று கூறினார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி கூறுகையில், ‘ அவசரப் பணி என்பதால் டெண்டர் விடாமல் கட்டிடங்களை இடிக்க வேண்டியதாயிற்று. கவுன்சில் ஒப்புதலோடுதான் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன,’ என்றார்.