தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு முறையாக அளிக்கவில்லை என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா? ஆர்.என் ரவியா? என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வதற்கான மசோதாவை தமிழக அரசு ஆளுநர் ரவியின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எதன் அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உள்ளிட்ட 8 கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு தமிழக அரசும் பதில் அளித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. எங்கள் நிலைப்பாட்டை தமிழக ஆளுநரிடமும் தெரிவித்துள்ளோம். தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய உள்ளதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவறான சட்டம் என்பதே இதற்கு காரணம். தமிழக அரசு திருத்தம் செய்யாவிட்டால் நிச்சயம் நீதிமன்றத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட வாய்ப்பு அதிகம். ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தெரிவித்துள்ள காரணத்தை சட்டப்பேரவை தலைவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என பேசி இருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார். அப்பொழுது அண்ணாமலை குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் ”ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை முறையாக அரசு அளிக்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநர் அண்ணாமலையா? ரவியா? எங்களிடம் என்ன விளக்கம் கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அண்ணாமலை இடம் ஆளுநர் சொன்னாரா? இந்த ரகசியங்களை எல்லாம் ஆளுநர் அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்திய உள்ளாரா? என சந்தேகத்துடன் எழுந்து கேள்வி எழுப்பியுள்ளார்.