நாகர்கோவில்: குமரியில் 7வகையான வனங்கள் உள்ளன. இந்த வனங்களில் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அதிகளவில் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கை. இதனால் கோடையில் காளிகேசம், உலக்கை அருவி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. மேலும் பயர் லைன் எனப்படும் தீ தடுப்பு வேலிகள் வனப்பகுதிகளில் உருவாக்கப்படும். பொதுவாகவே குமரியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீ விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக வனத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், ஒரு ஆண்டு கனமழை பெய்யும் போது வளர்ந்து நிற்கும் புற்கள் மறு ஆண்டு மழை குறையும் போது, தீயில் பற்றி எறிவது எனக்கூறப்படுகிறது.
இதுதவிர அரசு ரப்பர் தோட்டம், 200க்கும் மேற்பட்ட தனியார் எஸ்டேட்கள், பழங்குடியினர் குடியிருப்புகள் நிறைந்துள்ளதுடன், மேய்ச்சல் காடாகவும் இருந்து வருகின்றன. இந்தநிலையில் கோடையில் வனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தீ தடுப்பு வேலிகள் அமைத்தல், கவனக்குறைவால் மக்கள் குடியிருப்பு, அரசு ரப்பர் தோட்ட கூப்பு பகுதிகளில் அதிக தீ விபத்துகள் தற்போது ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019 மற்றும் 2010ம் ஆண்டு அதிகளவில் தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தது. கடந்தாண்டு தொடர் மழை காரணமாக தீ விபத்துகள் அதிகம் இல்லை.
இந்தாண்டு இதுவரை 20க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதுவும் அடர்ந்த வனப்பகுதியில் இல்லாமல், மக்கள் குடியிருப்பு, அரசு ரப்பர் தோட்ட கூப்புகள் பகுதியில்தான் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம் குற்றியாறு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தும் ரப்பர் தோட்டம் அருகே தான் தொடங்கியுள்ளது. தற்போது தீ விபத்துகளை தடுக்க வனத்துறை சார்பில் 4 மாதங்களுக்கு 12 தற்காலிக தீ விபத்து கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பயர் பைட்டர்கள் உள்பட 80 வனத்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் வனப்பகுதிகளில் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதத்துடன் தீ விபத்தகள் முடிந்து விடும் என்றாலும், ஏப்ரல் மாதமும் கண்காணிப்பு பணி தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கி திட்டத்தில், 5 தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளிமலையில் 2 தடுப்பணைகளும், களியல் சிற்றாறு பகுதியில் 2, அழகியபாண்டியபுரம் வீரப்புலியில் 1 என 5 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகள் காரணமாக அந்த பகுதியில் தட்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதுடன், வனவிலங்குகளுக்கு தண்ணீர் தாகம் தீர்க்கவும் பயன்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் இளையராஜாவிடம் கேட்டபோது, வனங்களில் தீ விபத்துகளை இருவகையாக பிரித்துள்ளோம்.
கிரவுன்ட் பயர், கேலக்ஸி பயர். கிரவுன்ட் பயர் என்பது தரையில் உள்ள புற்கள் புதர்கள் மட்டுமே பற்றி எரியும். மரங்கள் எரிவதில்லை. வனஉயிரினங்களும் பாதிக்கப்படாது. கேலக்ஸி பயர்தான் மிகவும் ஆபத்தானது. இதில் மரங்கள் பற்றி எரியும். குமரியில் தற்போது மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு ரப்பர் தோட்ட கூப்புகள் பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ள கிரவுன்ட் பயர் ஆகும். இதனை தடுக்க தற்போது இரவு பகலாக வனத்துறை ஊழியர்கள் தீ தடுப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு 2 செக் டேம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த மரங்களும் பாதிக்கப்படவில்லை என்றார்.
சீரோ பாய்ண்டில் அனுமதியில்லை
காளிகேசம் வனப்பகுதியில் தற்போது தீ விபத்துகள் இல்லை என்பதுடன், அங்கு சோதனை சாவடி மூலம் கண்காணிப்பு உள்ளதால், அங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சுங்கான்கடை மற்றும் பேச்சிப்பாறை ஜீரோ பாய்ன்டில்தான் முதன்முதலில் தீ விபத்து ஏற்பட்டதுடன், அடிக்கடி தீ விபத்தகள் ஏற்பட்டுள்ளதால், ஜீரோ பாய்ன்டிற்கு சுற்றலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
தெக்குமலையில் விபத்தில்லை
மருந்துவாழ்மலை, ெதக்குமலை, தாடகைமலை போன்றவற்றிலும் அதிக தீ விபத்துகள் ஏற்படும். தற்போது காப்புக் காடாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு ஆடு மாடு மேய்ச்சலுக்கு அனுமதியில்லை. முன்பு இங்கு கால்நடைகளை மேய்சலுக்கு விடுபவர்கள் காரணமாக அதிக தீ வைப்பு சம்பவங்கள் ஏற்பட்டன. தற்போது மேயச்சல் அனுமதியில்லை என்பதால், இங்கு தீ விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.