ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் சென்னையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து திடீரென இ.பி.எஸ் அணியில் அவர் இணைந்ததன் பின்னணி குறித்து அந்தக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.
யார் இந்த செந்தில் முருகன்?!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன். இவரை அந்த அணியிலிருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. லண்டனிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், கடந்த கொரானா சீசனில் ஒர்க் ஃப்ரம் ஹாேம் என்ற முறையில் ஈரோட்டிலுள்ள அவரது வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் எடப்பாடி அணியின் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அதேநாளில் துள்ளி எழுந்த ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்தார். சென்னையில் செந்தில் முருகனின் புகைப்படத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்து, `இவர்தான் எங்கள் வேட்பாளர்’ என்றார். அதேசமயம் ஈரோட்டில் அந்தக் கட்சியின் நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்கள் முன்னிலையில் வேட்பாளர் எனக் கூறி செந்தில் முருகனை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத செந்தில் முருகனிடம் செய்தியாளர்கள் எந்தக் கேள்வியையும் கேட்க விடாமல் அப்படியே அழைத்துச் சென்று காரில் ஏற்றி பறந்தார் கு.ப.கிருஷ்ணன். கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர் வேட்பாளரா என்ற முணுமுணுப்பு அப்போதே அந்த அணியில் இருந்த சொற்ப அளவிலான கட்சியினர் மத்தியில் எழுந்தது. இந்த எதிர்ப்பு காரணமாக செந்தில் முருகனுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியை அவசர, அவசரமாக வழங்கி மற்றவர்களின் வாயை அடைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.
பின்னர், தனது அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவார் என்று அறிவித்து, இந்த களேபரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பி.எஸ். இடைத்தேர்தல் முடிந்ததும், ஓ.பி.எஸ் அணியின் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமையில் ஓ.பி.எஸ் அணியிலிருந்த மாவட்ட நிர்வாகிகள் பலர், சேலத்திலுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவர் அணியில் இணைந்தனர்.
இதனால் தனித்து விடப்பட்ட செந்தில் முருகனும் நேற்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் அணியில் ஐக்கியமானார். ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், எடப்பாடி அணியில் இணைந்ததற்கான காரணம் குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். இ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பேசுகையில், “செந்தில்முருகன் ஓர் அப்பாவிங்க… கட்சிக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் வீட்டு பக்கத்தில் செந்தில் முருகனின் சித்தப்பா வசித்து வருகிறார். இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததும், செந்தில் முருகனின் சித்தப்பாவிடம் கு.ப.கிருஷ்ணன், `ஈரோடு தானே உங்க சொந்த ஊர்… அந்த தொகுதியில் உங்க சமுதாயத்தைச் (முதலியார்) சேர்ந்த உறவினர் யாராவது இருந்தா சொல்லுங்க… அவரையே வேட்பாளரா அறிவிச்சிடலாம். செலவெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்’னு உறுதியளிச்சதால, செந்தில் முருகனும் வேட்பாளராக ஒப்புக் கொண்டார்.

செந்தில் முருகனுக்கு அரசியல் பற்றி தெரியாது. கட்சியில் யார், எது சொன்னாலும் கேட்டுக் கொள்வார். அப்படி இருந்தவரை வேட்பாளராக அறிவிச்சு, பின்னர் போட்டியிலிருந்து வாபஸ் பெற வைச்சதாலே அவருக்கு ரொம்ப சங்கடமா போயிருச்சு… கட்சிக்காக அவர் செய்த செலவையும் ஓ.பி.எஸ் தரப்பில் தரவில்லை. வேட்பாளரை வாபஸ் பெற்ற பிறகு ஓ.பி.எஸ் அணியில் அவரை சுத்தமா மறந்துட்டாங்க. போட்டியிடாமல் வாபஸ் பெற்றதால் அவமானத்தால் முகத்தை வெளியே காட்ட முடியாமல் மாஸ்க் போட்டுட்டு வலம் வந்தார். தேர்தல் முடிவுக்குப் பிறகும், மாஸ்க்கை கழற்றவில்லை. இந்த மனஉளைச்சலில் ஒருகட்டத்தில் எடப்பாடி அணியில் இணைவது என்று முடிவெடுத்தார்.

உள்ளூரில் உள்ள அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் ஒருவருடன் பேசி, மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்துடன் சேர்ந்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று எங்கள் அணியில் இணைந்தார் செந்தில் முருகன்” என்றனர்.
இது தொடர்பாக செந்தில் முருகனிடம் பேச அவரைப் பலமுறை போனில் அழைத்தும், அவர் நம்மிடம் பேசவில்லை.