வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் சென்று, ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வாலாஜாபாத் – காஞ்சிபுரம் செல்லும் சாலையில், ராஜம்பேட்டை கிராமத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் நேற்று அதிகாலை 3 மணியளவில் எஸ்ஐ தென்னரசு தலைமையில், போலீசார் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜம்பேட்டையில் உள்ள தனியார் ஏடிஎம் மையம் அருகே எஸ்ஐ தென்னரசு ரோந்து ஜீப்பில் சென்றுள்ளார். அங்கு, ஏடிஎம் இயந்திரத்தை முகமூடி அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் உடைக்க முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசார் வருவதை கண்டதும், ஏடிஎம் மையத்தில் இருந்து 2 மர்ம நபர்களும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று, கைரேகை நிபுணர்களை வரவழைத்து, 2 மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர், மோப்பநாய் வர வழைக்கப்பட்டது. அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று மோப்ப நாய் நின்று விட்டது.இதைதொடர்ந்து எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி பதிவுகளை வைத்து, முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* மிளகாய் பொடி தூவி ஏடிஎம் மையத்திற்குள் சென்று ஆய்வு செய்தபோது, ஏடிஎம் இயந்திரத்ைத சுற்றிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தின் முன்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமரா, தொடுதிரை மற்றும் பணம் வைக்கும் பெட்டி ஆகியவற்றை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், போலீசார் கொள்ளையர்கள் விட்டு சென்ற கடப்பாரை, மிளகாய் தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.