அமலாக்கத்துறை ரெய்டு: கர்ப்பிணி மருமகளை 15 மணி நேரம் அமர வைத்த அதிகாரிகள் – பாஜக-வை சாடிய லாலு

பீகாரில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தை பா.ஜ.க படிப்படியாக அழிக்க முயன்றதால் முதல்வர் நிதீஷ் குமார் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனால் கோபமடைந்துள்ள மத்திய அரசு, லாலு பிரசாத் யாதவின் பழைய வழக்குகளை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. ஏற்கெனவே லாலு பிரசாத், அவரின் மனைவியிடம் வீட்டுக்கேச் சென்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று லாலு பிரசாத்தின் மகன், மகள்களுக்கு சொந்தமான 15 இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர்.

இதில் டெல்லியில் உள்ள பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடும் அடங்கும். இந்த ரெய்டு குறித்து லாலு பிரசாத் யாதவ் காட்டமாக தன் டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் “நாங்கள் எமர்ஜென்சியின் இருண்ட பகுதியை பார்க்கிறோம். இதில் நாங்களும் போராடுவோம். ஆதாரமற்ற பழிவாங்கும் வழக்குகளுக்காக பா.ஜ.க.வின் அமலாக்கப்பிரிவு என் மகள்கள், பேரக்குழந்தைகள், கர்ப்பிணி மருமகளை 15 மணி நேரம் ஒரே இடத்தில் அமர வைத்திருக்கின்றனர்.

தேஜஸ்வி யாதவ்

பா.ஜ.க இந்த அளவுக்கா கீழ்த்தரமாக வந்து எங்களுடன் அரசியல் சண்டை போடவேண்டும்?. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கொள்கைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். பாஜகவின் அரசியலுக்கு நானோ என் குடும்பத்தினரோ அடிபணியமாட்டோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக தானம் கொடுத்த அவரது மகள் ரோஹினி ஆசாரியாவும் இந்த ரெய்டு குறித்து விமர்சனம் செய்து இருந்தார். கர்ப்பிணி மைத்துனி என்ன தவறு செய்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஏன் மீண்டும் லாலு குடும்பத்தில் ரெய்டு

லாலு பிரசாத் யாதவ் 2009-14ம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது பொது பொதுமக்களிடம் நிலத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கிக்கொடுத்தாக லாலுபிரசாத் யாதவ் மீதும், அவரின் மனைவி மீதும் கடந்த ஆண்டு சி.பி.ஐ. ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

லாலுபிரசாத்

லாலு பிரசாத் யாதவ் மகள்கள் ஹேமா, மிசா பாரதி மீதும் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது. டி பிரிவு வேலைக்கு விளம்பரம் செய்யாமல் நிலத்துக்கு வேலை என்ற திட்டத்தில் 12 பேரை வேலைக்கு நியமித்ததாக லாலு மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஜபல்பூர், ஹஜ்பூர் ரயில்வே மண்டலத்தில் இந்த மோசடி நடந்ததாக சி.பி.ஐ.தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறது.

ரயில்வேயில் வேலை வாங்கிய அனைவரும் லாலு பிரசாத் குடும்பத்தினர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு சொந்தமான கம்பெனி பெயருக்கு தங்களது நிலத்தை எழுதிக்கொடுத்திருந்தனர்.

அதோடு 4.39 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சம் சதுர அடி நிலத்தை லாலு பிரசாத் குடும்பத்தினர் வெறும் 26 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் சி.பி.ஐ.குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டது. இவ்வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடும், பழிவாங்கும் நோக்கத்தோடும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ராப்ரிதேவி தெரிவித்திருக்கிறார்.

பாஜக

லாலு பிரசாத்தை கண்டு பா.ஜ.க.பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பா.ஜ.க. தங்களுக்கு பணியாத அரசியல் தலைவர்களை துன்புறுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியும் குற்றம் சாட்டி இருக்கிறார். பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. 2024-ம் ஆண்டு தேர்தலில் ராஷ்ட்டீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் சேர்ந்து போட்டியிட்டால் அது பா.ஜ.க-வுக்கு எதிராக முடியும் என்பதால் பா.ஜ.க அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. மூலம் தொந்தரவு செய்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. லாலு பிரசாத் யாதவ் பீகாரில் முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.